ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுமா?

அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.;

Update:2022-05-23 01:32 IST

ராஜபாளையம்

அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ராஜபாளையம் வழியாக தென்காசிக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தண்ணீர் வரத்து

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆதலால் இங்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தமிழக அரசானது தடை விதித்திருந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் பாதிப்படைந்தனர்.

குளிக்க அனுமதி

இந்தநிலையில் தற்போது கொரோனா பரவலானது குறைந்துள்ள நிலையில் அருவிகளில் குளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரத்தில் அனைத்து பகுதிகளில் இருந்து குற்றாலத்திற்கு வந்து செல்ல சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ், கொல்லம் விரைவு வண்டி ஆகியவை தினமும் மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சிலம்பு விரைவு வண்டியானது திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

மேலும், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயிலானது தினமும் 3 முறை இயக்கப்பட்டு வந்தது. தற்போது இருமுறை மட்டுமே அந்தரெயில் இயக்கப்படுகிறது. நண்பகல் 11.15 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு செங்கோட்டைக்கும், அங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 3.50 மணிக்கும் சென்றடையும் வகையில் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் இயக்கப்படாத காரணத்தால், ஏராளமான சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து, நீண்ட நேரம் பயணம் செய்யும் நிலை உள்ளது. ஆதலால் குற்றால சீசன் தொடங்குவதையொட்டி சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட மதுரை-செங்கோட்டை பகல் நேர பயணிகள் ரெயில், நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயிலை தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்