சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?
கல்லுக்குழியால் விபத்து அபாயம் நிலவுவதால் சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.;
கிணத்துக்கடவு
கல்லுக்குழியால் விபத்து அபாயம் நிலவுவதால் சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
கல்லுக்குழி
கிணத்துக்கடவு அருகே உள்ள பகவதிபாளையம் வழியாக நெம்பர்-10 முத்தூர், சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் காய்கறிகளை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில் அந்த சாலையோரத்தில் கல்லுக்குழி ஒன்று உள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக, அந்த கல்லுக்குழியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆனால் கல்லுக்குழிக்கு அருகில் சாலை இருப்பதால், அங்கு தடுப்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை.
இரும்பு தடுப்புகள்
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தால், கல்லுக்குழியில் விழுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
திறந்தவெளியில் உள்ள அந்த கல்லுக்குழியில், இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்கள் சற்று நிலைதடுமாறினாலும் விழுந்து விடும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, சாலையோரம் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.