படுக்கை வசதி இல்லாததால் பச்சிளங்குழந்தையுடன் தரையில் படுத்த பெண்

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் பச்சிளங்குழந்தையுடன் தரையில் படுத்திருந்த பெண் குறித்து, டுவிட்டரில் அண்ணாமலை, தி.மு.க. எம்.எல்.ஏ. இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.;

Update:2023-08-09 00:11 IST

விக்கிரவாண்டி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 28). இவர் பிரசவத்திற்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 5-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையின் கைகளில் தசை வளர்ந்திருந்ததது.

இதையடுத்து குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ராதிகாவின் குழந்தையை டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அங்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்காததால், ராதிகா தனது குழந்தையுடன் அங்குள்ள வரண்டாவில் உள்ள தரையில் படுத்திருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து ராதிகாவுக்கும், அவரது குழந்தைக்கும் ஒரு அறையில் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

பாதாளத்துக்கு தள்ளுகிறதா?

மருத்துவமனை வரண்டாவில் ராதிகா தனது குழந்தையுடன் தரையில் படுத்திருந்த வீடியோவை பார்த்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை , அது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தன் தாயுடன் எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் வராண்டாவில் படுக்க வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு என்று ஊரை ஏமாற்றி வருகிறது தி.மு.க. அரசு. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து துயர சம்பவங்கள் நடந்த பிறகும் அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை.

தங்கள் கட்சியினர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்க ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளை பாதாளத்துக்கு தள்ளி கொண்டிருக்கிறதா தி.மு.க.? என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. பதில்

இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வரை தொடர்பு கொண்டு, ராதிகாவுக்கும், அவரது குழந்தைக்கும் படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறினேன். அதன்படி அவர்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு்ள்ளது. தற்போது அவர்கள் நலமாக உள்ளதாக அதில் அவர் கூறியிருந்தார்.

பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இடையே டுவிட்டரில் நடந்த இந்த கருத்து மோதலுக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்