தீக்குளித்து தொழிலாளி தற்கொலை

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-10-09 00:15 IST

சுல்தான்பேட்டை

மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 43). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜா மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது குடித்துவிட்டு வந்து, ராதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

தகராறு

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக அவரது வீட்டில் சமையல் கியாஸ் அடுப்பின் ரெகுலேட்டர் பழுதாகி இருந்தது. இதனால் மண் எண்ணெய் அடுப்பில் டீசல் ஊற்றி சமையல் செய்து வந்தனர்.

ராதா, நேற்று முன்தினம் டீசல் வாங்கி வர ராஜாவை அனுப்பினார். ஆனால் அவர், டீசல் வாங்கிய பிறகு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை ராதா கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் கோபித்துக்கொண்ட ராதா தனது மகள்களை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள அக்காள் கண்ணம்மாள் என்பவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு 8 மணியளவில் ராஜாவின் வீட்டில் இருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது. இதை அறிந்த ராதா மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது குளியல் அறையில், உடலில் டீசலை ஊற்றி ராஜா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்