எர்ணாவூரில் குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளி சாவு - தம்பிகளே தள்ளிவிட்டு கொன்றார்களா?

குடிபோதையில் தகராறு செய்த கூலி தொழிலாளியை அவரது தம்பிகள் தள்ளிவிட்டதால் தலையில் காயம் ஏற்பட்டது. இதில் அவர் உயிரிழந்தார். எனவே அவர் கொலை ெசய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-06-13 06:56 GMT

எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் ஹரிஷ்குமார் (வயது 52). கூலி தொழிலாளியான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம்.

நேற்று காலை ஹரிஷ்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஹரிஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுபற்றி தகவல் அறிந்த எண்ணூர் போலீசார், ஹரிஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஹரிஷ்குமார் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். அப்போது அவரை அவருடைய தம்பிகளான அபி, ஹென்றிகுமார் ஆகியோர் தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில் ஹரிஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி அக்கம் பக்கத்தினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து 108 ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஹரிஷ்குமார் மறுத்துவிட்டார்.

இதையடுத்து அவரை பார்த்துக்கொள்ளும்படி உறவினர்களிடம் கூறிவிட்டு போலீசார் சென்றுவிட்டனர். இந்தநிலையில்தான் மறுநாள் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

எனவே, அவருடைய தம்பிகள் தள்ளி விட்டதால் ஹரிஷ்குமார் இறந்தாரா? அல்லது அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்து போனாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே ஹரிஷ்குமார் சாவுக்கான காரணம் தெரியவரும். அதில் அவர் கொைல செய்யப்பட்டாரா? என்பது தெரிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்