கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி தொழிலாளி தற்கொலை முயற்சி
பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் அருகே கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரமத்திவேலூர்
கொதிக்கும் எண்ணெய்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் மோகனூர் பிரிவு ரோடு அருகே நேற்று முன்தினம் காலை 55 வயதுடைய நபர் ஒருவர் சாலையோரத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென அவர் கீழே கிடந்த கற்களை எடுத்து தனது கை, கால்களில் கிழித்துக்கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து இரவு திரும்பினார்.
இதையடுத்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடைக்கு அந்த நபர் வந்தார். கடைக்கு முன்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை திடீரென எடுத்து தன் தலையில் ஊற்றினார். இதனால் அவர் வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் திருச்செங்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பண்ணன் (வயது 55) என்பது தெரியவந்தது.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.