டிப்பர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாப சாவு

Update: 2023-05-31 19:57 GMT

கருப்பூர்:-

கருப்பூர் அருகே டிப்பர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

டிப்பர் லாரி

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). இவர் நேற்று ஓமலூரில் இருந்து ஏற்காட்டுக்கு டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றி கொண்டு சென்றார். லாரியின் பின்புறம் செங்கற்களின் மீது தொழிலாளர்களான பண்ணப்பட்டியை சேர்ந்த ராஜா (31), மாட்டுக்காரன் புதூரை சேர்ந்த மதியழகன் (22) ஆகியோர் உட்கார்ந்து பயணம் செய்தனர்.

இந்த லாரி கருப்பூர் அருகே கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமி (32) என்பவர் திடீரென சாலையை கடந்தார். அவர் மீது மோதாமல் இருக்க முருகேசன் பிரேக் அடித்தார்.

தொழிலாளி பலி

அந்த நேரம் பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் லாரியின் பின்புறம் மோதியது. இதில் தொழிலாளர்களான ராஜா, மதியழகன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டடு படுகாயம் அடைந்தனர். அப்போது சரக்கு வாகனம் ராஜா மீது ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் டிப்பர் லாரி மோதியதில் லட்சுமி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

அவர்கள் படுகாயம் அடைந்த மதியழகன், லட்சுமி உடல்களை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிப்பர் லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்