மண்டல அளவிலான தடகள போட்டிகள்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கோவையில் நடந்தது. இதில் 700 வீரர்கள் பங்கேற்றனர்.;
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் கோவையில் நடந்தது. இதில் 700 வீரர்கள் பங்கேற்றனர்.
தடகள போட்டிகள்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், மதுரை, விழுப்புரம், ஈரோடு ஆகிய 8 மண்டலங்களில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் இடையேயான மண்டல அளவிலான தடகள போட்டிகள் கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வரவேற்றார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் (நிதி) சுந்தரவதனம், இயக்குனர் சிவலிங்க ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் சமாதானத்துக்கு அடையாளமாக புறாக்களை பறக்கவிடப்பட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன.
வெற்றி பெற வேண்டும்
100 மீட்டர், 200, 400, 800, 1,500, 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தடை ஓட்டம், வட்டு எறிதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன.
இதில் எட்டு மண்டலங்களை சேர்ந்த 700 வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீரர்கள் தங்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடினார்கள்.
முன்னதாக தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சுந்தரவதனம் பேசும்போது, தமிழக மின்வாரியத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனவே ஊழியர்களிடம் போட்டி இருக்க வேண்டும், ஆனால் பொறாமை இருக்கக்கூடாது. எனவே இதில் பங்கேற்கும் ஊழியர்கள் தங்கள் திறமைகளை வெளியே கொண்டு வந்து வெற்றி பெற வேண்டும் என்றார்.
பரிசளிப்பு விழா
தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.