#லைவ் அப்டேட்ஸ்: ரஷியாவை நம்ப வேண்டாம்...பெலாரஸ் மக்களை எச்சரித்த உக்ரைன் அதிபர்...

உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ், ரஷியாவின் நடவடிக்கையால் இந்த போர் தாக்குதலுக்குள் உள் இழுக்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-27 22:20 GMT


Live Updates
2022-06-28 16:16 GMT

சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு ரஷியாவிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி 7 நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தென் சீனக் கடலில் கூடுதல் உரிமை கோருவதை சீனா கைவிட வேண்டும் என்றும் ஜி 7 தலைவர்கள் வலியுறுத்தினர். 

2022-06-28 13:05 GMT

ரஷியாவின் மிக நெருங்கிய நட்பு நாடு மற்றும் உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ்ஸில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ரஷிய ராணுவம் முதல் முறையாக உக்ரைனில் வான் தாக்குதல் நடத்தியது.

இந்தநிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ், ரஷியாவின் போர் நடவடிக்கைக்குள் உள் இழுக்கப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ வாயிலாக பெலாரஸ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ரஷியர்களால் பெலாரஸ் நாடும் உக்ரைன் போர் நடவடிக்கைக்குள் உள் இழுக்கப்படுவதாகவும், பெலாரஸ் மக்களுக்குரிய அனைத்து விஷயங்களை ரஷியா ஏற்கனவே தீர்மானித்து விட்டதாகவும், உங்களுடைய உயிர் ரஷியர்களுக்கு முக்கியமானது இல்லை எனவும் பெலாரஸ் மக்களை எச்சரித்துள்ளார்.

அத்துடன் பெலாரஸ் மக்கள் நிச்சயமாக உக்ரைனை ஆதரிக்கிறார்கள், போரை அல்ல, இந்த காரணத்தால் தான் ரஷிய தலைவர்கள் உங்களை இந்த போர் நடவடிக்கைக்குள் உள்ளிழுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதல் எந்த திசையில் இருந்து வந்தாலும், எந்த ஆயுதங்களை கொண்டு தாக்கினாலும் உக்ரைன் அவற்றை எதிர் கொண்டு நிச்சியமாக வெற்றிப் பெறும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

2022-06-28 12:43 GMT

உக்ரைன் நினைத்தால் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரலாம் என ரஷியா தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

உக்ரைன் சரணடைந்தவுடன் ரஷியா தனது தாக்குதலை நிறுத்தும். உக்ரைன் தரப்பு தங்கள் படைகளிடம், ஆயுதங்களைக் கீழே வைக்க உத்தரவிடுமாறு உக்ரைன் அதிகாரிகளை ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரேனிய தரப்பு நினைத்தால், இன்றைய தினம் முடிவதற்குள் அனைத்தையும் நிறுத்த முடியும். ரஷிய தேசியவாத பிரிவுகள், தங்கள் ஆயுதங்களைக் கீழே போட எங்கள் உத்தரவு அவசியம் என்று கூறினார்.

2022-06-28 09:50 GMT

உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``க்ரிமென்சுக் நகரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ரஷியாவால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு பயங்கரவாத செயல்" என குற்றம்சாட்டி இருக்கிறார்.

உக்ரைனில் உள்ள வணிக வளாகம் மீது ரஷிய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

2022-06-28 05:17 GMT

உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 59 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளில் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2022-06-28 00:30 GMT


கிரெமென்சுக் ஷாப்பிங் மால் மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக உக்ரைனின் மாநில அவசர சேவையின் தலைவரான ஹெர்கீ குரூக் கூறுகையில், கிரெமென்சுக் ஷாப்பிங் மால் மீது ரஷிய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் 59 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

2022-06-27 23:46 GMT


கார்கிவ் நகரில் ரஷிய குண்டு வீச்சு தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்

கார்கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷியா நடத்திய தாக்குதலின் விளைவாக நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், 18 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

2022-06-27 22:47 GMT


ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் துணிச்சலான பயங்கரவாத செயல்களில் ஒன்றாகும் - ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது உரையில், க்ரிமென்சுக் (Kremenchuk) நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவும், ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் துணிச்சலான பயங்கரவாதச் செயல்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2022-06-27 22:29 GMT


கிழக்கு உக்ரைனில் உள்ள "நெரிசலான" மால் மீது ரஷிய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடந்தபோது கிரெமென்சுக்கில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று அம்மாநில ஆளுநரை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில், “ ரஷியா ஆக்கிரமிப்பாளர்கள் ஷாப்பிங் சென்டரில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். அப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருந்தனர். மால் தீப்பிடித்து எரிந்தது. மீட்புப் பணியாளர்கள் தீயை அணைத்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாதது” என்று அதில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்