ஜெர்மனியில் பயங்கரம் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றி தாக்குதல் 12 பேர் உடல் நசுங்கி சாவு

ஜெர்மனியில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Update: 2016-12-20 22:00 GMT
பெர்லின்,

ஜெர்மனியில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஏற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

லாரியை ஏற்றி தாக்குதல்

ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் சந்தை இயங்கி வந்தது. இந்த சந்தையில் பொதுமக்கள் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 8.14 மணிக்கு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு உருக்கு உத்திரங்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, கிறிஸ்துமஸ் சந்தைக்குள் சீறிப்பாய்ந்து ஆட்கள் மீது ஏற்றி சுமார் 80 மீட்டர் தொலைவுக்கு சென்று நின்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. லாரி சக்கரங்களுக்கு இடையே சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். பலர் சக்கரத்துடனே இழுத்துச் செல்லப்பட்டனர்.

12 பேர் பலி

இந்த கோர சம்பவத்தில் 12 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை, அவர்கள் மீட்டு, ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியின் டிரைவர் சம்பவ இடத்தில் லாரியை விட்டு விட்டு, அந்த பகுதியில் அமைந்திருந்த டையர்கார்டன் என்ற பூங்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்.

பாகிஸ்தான் அகதி கைது

ஆனால் அவரை ஒருவர் 2 கி.மீ. தொலைவுக்கு பின்தொடர்ந்து ஓடியும் பிடிக்க முடியாத நிலையில் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து லாரி டிரைவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இருளைப் பயன்படுத்தி தப்பி விடலாம் என்ற நோக்கத்தில்தான் அவர் பூங்காவை நோக்கி ஓடியதாக போலீசார் கருதுகின்றனர். அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் அகதியாக இருக்கக்கூடும் எனவும், அவர் கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனிக்குள் வந்திருக்கக்கூடும் எனவும் முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் பின்னர், அவர் பாகிஸ்தான் அகதி என்றும், பெயர் நேவத் (வயது 23) என்றும் உறுதிபடுத்தப்பட்டது.

பயங்கரவாத தாக்குதல்

முதலில் இந்த சம்பவம் விபத்தாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் இப்போது அது பயங்கரவாத தாக்குதலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதி, அந்தக் கோணத்தில்தான் விசாரணை நடைபெற்று வருகிறது. இதை பெர்லின் நகர போலீஸ் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பாக ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலிடம் உள்துறை மந்திரியும், பெர்லின் மேயரும் விளக்கியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சம்பவத்தை நேரில் பார்த்த இங்கிலாந்தை சேர்ந்த மைக் பாக்ஸ் என்பவர், “அந்த லாரி இன்னும் 3 மீட்டர் தொலைவுக்கு வந்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன் என்றே சொல்ல முடியாது. தெய்வாதீனமாக உயிர் தப்பினேன். இந்த சம்பவம் வேண்டுமென்று திட்டமிட்டு நடத்திய ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்” என கூறினார்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி, போலந்து நாட்டின் ஏரியல் ஜூராவ்ஸ்கை என்பவருக்கு சொந்தமானது, போலந்து நாட்டில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்