அமெரிக்காவில் பீட்டா தலைமை அலுவலகம் முற்றுகை தமிழர்கள் போராட்டம்

அமெரிக்காவில் பீட்டா தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-01-23 08:15 GMT
அமெரிக்காவில் பீட்டா தலைமை அலுவலகம் முற்றுகை தமிழர்கள் போராட்டம்


வாஷிங்டன்,

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில்  வாழும் தமிழர்கள்  தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நூற்றுக் கணக்கானவர்கள் பேரணியாக புறப்பட்டு வந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். பெரும்பாலான கோஷங்கள் தமிழில் முழங் கப்பட்டன.

போராட்டத்தில் பங்கேற்ற தொழில் நுட்ப  ஊழியர்கள் வினோத்குமார் கூறும் போது, “எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். அதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.அதற்கு அவசர சட்டம் வழி வகை செய்துள்ளது. எங்களுக்கு  சட்டபூர்வமான நடவடிக்கை தேவை. எங்களது  பழமையான கலாசாரம் தொடர வேண்டும் என்றார். இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில்  நடந்த போராட்டங்களில் இது மிக பெரிய அளவிலானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பீட்டா’  அமைப்பின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரில் உள்ளது. அங்கு உலக நாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்கள் ஹம்ப்டன் ரோடு வழியாக நார்போல்க் வந்து குவிந்தனர்.

‘பீட்டா’ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது  ‘பீட்டா’ அமைப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ‘எங்கள் காளைகளை நாங்கள்  நேசிக்கிறோம்.அவற்றை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியும். ஜல்லிக்கட்டு  எங்களது பாரம்பரியம், கலாசாரம், அதை விட்டுக் கொடுக்க மாட்டோம்‘ என்று பீட்டாவுக்கு எதிராக போராட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு வினாயகம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்