‘இலங்கையின் புதிய அரசியல் சட்டத்தை எதிர்ப்பேன்’ ராஜபக்சே அறிவிப்பு

புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்போகிறார்கள். இந்த மோசடியை நான் எதிர்ப்பேன்” என ராஜபக்சே கூறினார்.

Update: 2017-01-28 22:30 GMT
கொழும்பு,

இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டுப்போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனால் அங்கு இன்னும் சிறுபான்மை தமிழ் இன மக்களின் வாழ்க்கை கேள்விக்குரியதாகவே இருந்து வருகிறது. அவர்களுக்கு சம உரிமை, சம அதிகாரம், சம மதிப்பு இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 1978-ம் ஆண்டு முதல் அங்கு அமலில் இருந்து வருகிற அரசியல் சட்டத்தை மாற்றிவிட்டு, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கி, புதிய அரசியல் சட்டத்தை தற்போதைய சிறிசேனா அரசு இயற்றும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

ஆனால் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, தொடர்ந்து தமிழர்களின் எதிர்ப்பு சக்தியாக விளங்கி வருகிறார்.

தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கி புதிய அரசியல் சட்டம் கொண்டு வர அதிபர் சிறிசேனா எடுக்கும் முயற்சிக்கு எதிராக அவர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

இது தொடர்பாக நேற்றுமுன்தினம் கொழும்பு நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராஜபக்சே பேசினார். அப்போது அவர், “சிறிசேனா அரசு என்ன சொன்னது? அதிபரின் அதிகாரம் குறைக்கப்படும். பாராளுமன்றம் பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றப்படும் என்று சொன்னார்கள். இப்போது சிறுபான்மை தமிழ்மக்களை தாஜா செய்வதற்காக, அதிகாரப்பகிர்வு வாக்குறுதி வழங்குகிற வகையில் புதிய அரசியல் சட்டம் கொண்டு வரப்போகிறார்கள். இந்த மோசடியை நான் எதிர்ப்பேன்” என கூறினார். 

மேலும் செய்திகள்