அமெரிக்கா :பிளினின் ரஷிய தொடர்பு பற்றி விசாரணை நடத்த குடியரசு கட்சி வலியுறுத்தல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின்.

Update: 2017-02-15 21:30 GMT
வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருங்கிய கூட்டாளி, மைக்கேல் பிளின். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டபோதே ஜனநாயக கட்சி கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

இருப்பினும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்று 3 வாரங்களான நிலையில், அவர் ரஷியாவுடன் கொண்டிருந்த நெருங்கிய உறவு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதன்காரணமாக மைக்கேல் பிளின், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆனால், “ராஜினாமாவுடன் பிரச்சினை முடிவுக்கு வந்து விடவில்லை. அவரது ரஷிய உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வலியுறுத்தி வந்தது.

இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக, டிரம்பின் தேர்தல் பிரசார குழுவில் இடம் பெற்றிருந்தவர்களும், டிரம்பின் கூட்டாளிகளும் ரஷியாவின் மூத்த உளவுத்துறை அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது தொலைபேசி ஆவணங்கள் மூலமும், பேச்சை இடைமறித்துக்கேட்டதின் மூலமும் தெரியவந்துள்ளது என ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இப்போது மைக்கேல் பிளினின் ரஷிய தொடர்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

மேலும் செய்திகள்