ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்துக்கு வருகிறது

2-ம் உலகப்போரின்போது ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்துக்கு வருகிறது.

Update: 2017-02-18 21:30 GMT
வாஷிங்டன்,

உலக சர்வாதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர், அடால்ப் ஹிட்லர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மனியின் பெர்லின் நகரில், ஹிட்லரின் நாஜிப்படைகள் வீழ்ந்தன. கடைசியில் ஹிட்லர் 1945-ம் ஆண்டு, ஏப்ரல் 30-ந்தேதி தனது கைத்துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது (இரண்டாம் உலகப்போரின்போது) அவர் பயன்படுத்திய சிவப்பு நிறத்திலானதும், அவர் பெயர் பொறித்ததுமான தொலைபேசி, பெர்லினில் பதுங்கு குழியில் இருந்து கைப்பற்றப்பட்டது.

அதை கைப்பற்றிய ரஷிய வீரர்கள், ஒரு நினைவுச்சின்னமாக அதை இங்கிலாந்து அதிகாரி சர் ரால்ப் ரேனரிடம் ஒப்படைத்தனர். இப்போது அந்த தொலைபேசியை அவரது மகன் ஏலத்துக்கு கொண்டு வருகிறார்.

அதன் ஏலம், அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணம், செசாபீக்கே நகரில் நடைபெறுகிறது.

இதன் ஆரம்ப விலை 1 லட்சம் டாலராக (சுமார் ரூ.67 லட்சம்) இருக்கும் என ஏல நிறுவனமான அலெக்சாண்டர் ஏல நிறுவனம் கூறுகிறது. அதிகபட்சமாக 3 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 2 கோடியே 1 லட்சம்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஏல நிறுவன அதிகாரி பில் பனாகோபுலஸ் கூறும்போது, “ஹிட்லர் உபயோகித்த தொலைபேசி, பேரழிவுக்கு வித்திட்ட ஆயுதம். இந்த தொலைபேசியில் பேசித்தான் ஹிட்லர் உத்தரவுகளை பிறப்பித்தார்” என குறிப்பிட்டார். 

மேலும் செய்திகள்