பதவி பறிக்கப்பட்ட தென்கொரிய அதிபர் பார்க், நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தார்

தென் கொரியாவில் அதிபராக இருந்த பெண், பார்க் கியுன் ஹை, தனது நெருங்கிய தோழி சோய் சூன் சில்லுடனான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 10–ந் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2017-03-21 22:00 GMT
சியோல்,

பதவி பறிப்பின் காரணமாக விலக்குரிமையை இழந்து விட்ட நிலையில், ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சியோல் அரசு வக்கீல்கள் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

அதன்பேரில் விசாரணையில் பங்கேற்பதற்காக, நேற்று அவர் சியோல் நகரில் உள்ள அரசு வக்கீல்கள் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அவரது வக்கீல்கள் 2 பேரும் வந்தனர்.

பார்க் கியுன் ஹை வருவதை அறிந்த பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய பார்க் கியுன் ஹை, ‘‘நாட்டு மக்களிடம் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். விசாரணையின்போது நான் முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பேன்’’ என கூறினார்.

பதவி பறிக்கப்பட்ட பின்னர் இப்போதுதான் பார்க் கியுன் ஹை முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அரசு வக்கீல்கள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

சாம்சங் குழுமத்தின் தலைவர் ஜே ஒய் லீ உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவன அதிபர்களுக்கு சலுகை காட்டுவதாக கூறி, பெருந்தொகை லஞ்சம் பெற்றதாக சுமத்தப்படுகிற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், பார்க் கியுன் ஹைக்கு 10 ஆண்டுகளுக்கு அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சியோலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்