பிரிட்டன் பாராளுமன்ற வளாகம் அருகே பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 8 பேர் கைது

பிரிட்டன் பாராளுமன்ற வளாகம் அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2017-03-23 10:53 GMT
லண்டன், 

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. தாக்குதல் நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். காயம் அடைந்த 29 பேரில் ஏழு பேரில் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டு துணை போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் பயங்கரவாத தடுப்பு போலீஸ் படை தலைவர் மார்க் ராவ்லே பேசுகையில், இந்த தாக்குதலில் விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது.

 தாக்குதல் நடத்தியவர் யார் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. ஏனென்றால் தாக்குதல் நடத்தியதின் முழுமையான பின்னணி என்ன, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பது பற்றி விசாரித்து அறிய வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், பர்மிங்ஹாம், லண்டன் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தொடர்ந்து புலன் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் இந்த தாக்குதல் நடத்திய நபர், தனியாகத்தான் செயல்பட்டுள்ளார்; அவர் சர்வதேச பயங்கரவாதத்தால் கவரப்பட்டுத்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது எங்களது நம்பிக்கை என்று கூறினார். இந்த தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் பல்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்றாலும் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாக வில்லை. தற்போது பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்