வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு பின்னடைவு ஊழல் வழக்கில் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு பச்சைக்கொடி

கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் கீழ் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2017-03-23 21:00 GMT
டாக்கா,

வங்காளதேசத்தில் 1991–96, 2001–06 கால கட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் கலீதா ஜியா. பி.என்.பி. என்று அழைக்கப்படுகிற வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவரான இவர் 2001–06 காலகட்டத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, எரிவாயு வயல்களில் ஆய்வு செய்து, எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை கனடாவை சேர்ந்த நிகோ என்ற நிறுவனத்துக்கு வழங்கியதில் பெரும் ஊழல் புரிந்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக கலீதா ஜியா மீது ஊழல் தடுப்பு ஆணையம் 2007–ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.

ஆனால் இதற்கு எதிராக அவர், டாக்கா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.

ஆனால் இந்த தடையை எதிர்த்து ஊழல் தடுப்பு ஆணையம், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டை தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்கா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று விசாரித்தது.

விசாரணை முடிவில் டாக்கா ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் கீழ் கோர்ட்டு விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கினர்.

இது கலீதா ஜியாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்