வங்காளதேசத்தில் குண்டுவெடிப்பு 2 போலீசார் உள்பட 6 பேர் உடல்சிதறி உயிரிழப்பு

வங்காளதேச குண்டு வெடிப்பில் 2 போலீசார் உள்பட 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர்.

Update: 2017-03-26 11:08 GMT
டாக்கா, 


வங்காளதேசத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வருடம் ஜூலை மாதம் டாக்காவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக செல்லும் ஓட்டல் ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு கூறிய இந்த தாக்குதலை அடுத்து வங்காளதேசத்தில் பாதுகாப்பு படை பயங்கரவாதிகள் மீதான தாக்குதலை தொடங்கியது, அவ்வபோது பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டனர். இந்நிலையில் பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர்.  

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சோதனைச்சாவடிக்கு அருகே தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கச்செய்தார். அதிர்ஷ்டவசமாக இந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் இந்த தாக்குதல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு படையினர் நாடுமுழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

இந்த நிலையில் வடகிழக்கு பகுதியில் சில்ஹெட் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் இணைந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்புகளில் 2 போலீசார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் ராணுவவீரர்கள் மற்றும் போலீசார் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஐ.எஸ்., அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் வங்காளதேசத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்று வருகின்றன, ஆனால் உள்ளூர் பயங்கரவாத இயக்கங்களே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக வங்கதேசம் மறுத்து வருகிறது.

மேலும் செய்திகள்