பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இரவில் அதிரடி தாக்குதல்... காசாவில் 27 பேரை கொன்ற இஸ்ரேல் ராணுவம்

அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டால், ரபாவில் தரைவழி தாக்குதல் தவிர்க்கப்படலாம் என்று இஸ்ரேல் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார்.

Update: 2024-04-29 05:51 GMT

ரபா:

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறி உள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி பாலஸ்தீனர்கள் என 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். தனது கடைசி இலக்கான ரபா நகரிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது.

இது ஒருபுறமிருக்க போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எகிப்தில் இன்று தொடங்க உள்ளது. இதற்காக ஹமாஸ் அமைப்பு தனது குழுவை அனுப்பி உள்ள நிலையில், நேற்று இரவு காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.

ரபா நகரில் நடந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 20 பேரும், காசா சிட்டியில் 7 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பணயக்கைதிகள் உயிருடன் இருப்பதற்கான ஆதார வீடியோக்களை ஹமாஸ் வெளியிட்டதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் முன்வந்தது. அத்துடன், புதிய ஒப்பந்தத்தில் உள்ள திட்டங்களையும் வழங்கியுள்ளது. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டால், ரபாவில் தரைவழி தாக்குதல் தவிர்க்கப்படலாம் என்று இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். இதற்கு ஹமாஸ் அமைப்பினர் அளிக்கும் பதிலைப் பொருத்து அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்