அமெரிக்க கவர்னர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய தொழில் அதிபர் போட்டியிட முடிவு

அமெரிக்க கவர்னர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய தொழில் அதிபர் ஹர்சவர்தன் சிங் போட்டியிட முடிவு செய்துள்ளார். வேட்பாளர் தேர்தலில் அவர் களம் இறங்கினார்.

Update: 2017-03-29 22:45 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் குடியரசு கட்சியை சேர்ந்த கிறிஸ் கிறிஸ்டி கவர்னராக உள்ளார். இந்த மாகாணம், ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் மிகுந்த மாகாணம் ஆகும். இருப்பினும், கிறிஸ் கிறிஸ்டி, அங்கு தொடர்ந்து 2–வது முறையாக கவர்னர் பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16–ந் தேதி முடிகிறது. அந்த நாட்டின் அரசியல் சாசனப்படி அவர் அங்கு மூன்றாவது முறையாக கவர்னர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த ஆண்டு இறுதியில் அந்த மாகாணத்தில் புதிய கவர்னரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்திய தொழில் அதிபர்

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஹர்சவர்தன் சிங் (வயது 31), குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

அங்கு குடியரசு கட்சி வேட்பாளர் ஆவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. ஹர்சவர்தன் சிங்குடன், சட்டசபை உறுப்பினரான ஜேக் சியாட்டரெல்லி, துணை கவர்னர் கிம் குவாடக்னோ, ஸ்டீவன் ரோஜர்ஸ், ஜோசப் ரூடி ருல்லோ ஆகியோரும் வேட்பாளர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.

வேட்பாளரை குடியரசு கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஜூன் மாதம் 6–ந் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் ஹர்சவர்தன் சிங் ஈடுபட்டு வருகிறார்.

வாக்குறுதி

‘‘கவர்னர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைத்து, போட்டியிட்டு வெற்றி பெற்றால், சொத்து வரியை குறைப்பேன், அமெரிக்காவின் தொழில் நுட்ப மாகாணமாக நியூஜெர்சியை மாற்றிக்காட்டுவேன்’’ என அவர் வாக்குறுதி அளித்து வருகிறார்.

இவர் அங்குள்ள அட்லாண்டா நகரில் பிறந்தவர். நியூஜெர்சி தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்து என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்.

3–வது கவர்னர் ஆவாரா?

நியூஜெர்சி மாகாண கவர்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், இவர் அமெரிக்காவில் கவர்னர் பதவி பெறும் 3–வது இந்திய வம்சாவளி என்ற பெயரைத் தட்டிச்செல்வார்.

அமெரிக்க நாட்டில் முதல்முறையாக லூசியானா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பாபி ஜிண்டால் கவர்னர் பதவி வகித்தார்.

அவரை தொடர்ந்து தெற்கு கரோலினா மாகாணத்தில் மற்றொரு இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலி கவர்னராக இருந்தார். தற்போது அவர் டிரம்பால் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டு, திறம்பட பணியாற்றி வருகிறார்.

கலிபோர்னியா, நியூயார்க் மாகாணங்களை தொடர்ந்து நியூஜெர்சியில் இந்திய வம்சாவளியினர் அதிக எண்ணிக்கையில் குடியிருந்து வருகிறார்கள். 2000–ம் ஆண்டில் இருந்து அங்கு இந்திய அமெரிக்கர்கள் எண்ணிக்கை 72 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்