பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு இந்தியர்கள் கைது

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2017-03-31 10:47 GMT
இஸ்லமபாத்,

பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்து வந்த இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக 2 லட்சம் பாதுகாப்பு படையினரும் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் 6-வது கணக்கெடுப்பான இது, வரும் மே மாதம் முடிவுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் பாகிஸ்தான் அதிகாரிகள் தீவிரமாக கணக்கெடுக்கப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில், கராச்சி பகுதியிலுள்ள  குல்ஷான் இ இக்பால் மற்றும் சத்தார் ஆகிய இடங்களில் கணக்கெடுப்பின் போது, இரண்டு இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பாதுகாப்பு படை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். 

இந்தியர்கள் இரண்டு பேரும் கடந்த 8 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹசன் அகமது மற்றும் வஷீம் ஹாசன் என்ற இரு இந்தியர்களும் குஜராத்தைச்சேர்ந்தவர்கள் என்று பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் செய்திகள்