துருக்கி விமானத்தில் நடுவானில் குழந்தை பெற்ற பெண்

விமானம் 42 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, நபி டியாபிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

Update: 2017-04-10 22:15 GMT
கோனாக்ரி,

துருக்கி ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று கினியா நாட்டு தலைநகர் கோனாக்ரியில் இருந்து நேற்று முன்தினம் இஸ்தான்புல்லுக்கு புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகளுடன் நபி டியாபி என்ற 28 வார கர்ப்பிணியும் இருந்தார். விமானம் 42 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, நபி டியாபிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே விமான பணிப்பெண்கள் மற்றும் சில பெண் பயணிகள் சேர்ந்து டியாபிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கடிஜு என பெயர் சூட்டப்பட்டது. விமானத்துக்கு நடுவானில் கிடைத்த சிறிய பயணியை விமான ஊழியர்களும், சக பயணிகளும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வரவேற்றனர்.

பின்னர் விமானம் ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகரான வாகடூகுவில் தரையிறங்கிய போது, தாயும், சேயும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் நலமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நபி டியாபியின் பாதுகாப்பான பிரசவத்துக்கு உதவி புரிந்த விமான ஊழியர்களை துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனம் பாராட்டி உள்ளது.

மேலும் செய்திகள்