பிலிப்பைன்சில் வெளிநாட்டினரை கடத்தி கொன்ற அபு சயாப் முன்னணி தலைவர் பலியாகி விட்டதாக தகவல்

அபு சயாப் இயக்கத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவரும், அதன் முன்னாள் செய்தி தொடர்பாளருமான அபு ரமி என்ற முயாமர் அஸ்கலி பலியாகி விட்டதாக தகவல்.

Update: 2017-04-12 22:00 GMT
மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தீவான போஹோல் தீவில் உள்ள இனபங்கா நகரில் கடந்த 11–ந் தேதி அபு சயாப் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இப்போது அந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோதலில் அபு சயாப் இயக்கத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவரும், அதன் முன்னாள் செய்தி தொடர்பாளருமான அபு ரமி என்ற முயாமர் அஸ்கலி என்பவர் கொல்லப்பட்டு விட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

அவரது உடலை ராணுவம் கைப்பற்றி விட்டது.

இது தொடர்பாக ராணுவ தளபதி எட்வர்டோ அனோ நேற்று கூறுகையில், ‘‘அபி ரமி, மிரட்டி பணம் பறித்தல், ஆட்கடத்தல் போன்றவற்றில் மிகப்பெரிய தாதாவாக திகழந்து வந்தவர். மிக மோசமான அபு சயாப் தலைவர். பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டு வந்தவர். இப்போது கொல்லப்பட்டு விட்டார்’’ என கூறினார்.

பிலிப்பைன்சில் கடந்த ஆண்டு கனடாவை சேர்ந்த ஜான் ரிட்ஸ்டெல், ராபர்ட் ஹால் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஜூர்கன் காண்ட்னர் ஆகிய 3 பேர் வெவ்வேறு சம்பவங்களில் கடத்தி கொல்லப்பட்டதில் இந்த அபு ரமிக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்