ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் பலி

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

Update: 2017-04-14 06:45 GMT
காபூல்,

கேரள மாநிலத்தில் சமீப காலத்தில் பெண்கள் உள்பட 21 இளைஞர்கள் மாயமானார்கள். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்தவும் முதல்–மந்திரி பினராயி விஜயன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் சட்டசபையில் கூறும்போது, ‘‘கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த 17 பேர், பாலக்காட்டை சேர்ந்த 4 பேர் என 21 இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். முகாம்களுக்கு சென்றுவிட்டதாக பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன’’ என்றார்.

இந்நிலையில் நேற்று ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள இளைஞரான முர்ஷித் என்பவர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் கொல்லப்பட்டுவிட்டதாக, முர்ஷித்தின் பெற்றோர்களுக்கு டெலகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. ஆனால், இந்த தகவலை போலீஸ் தரப்பில் இன்னும் உறுதிபடுத்தவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன் டிகே ஹபீஸுதின்(வயது 24) என்ற கேரள இளைஞர் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டது நினைவு கூறத்தக்கது.

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய குண்டாக கருதப்படும் MOAB என்ற குண்டை, நேற்று இரவு 7 மணிக்கு ஐ.எஸ் அமைப்பினரின் இருப்பிடத்தில் அமெரிக்கப் படைகள் வீசின. இதில் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்