நடுவானில் தீப்பிடித்த விமான என்ஜின்: கதறி அழுத பயணிகள்

நைஜீரியா நாட்டில் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் பயணிகள் அலறி துடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-04-20 09:35 GMT


நைஜீரியாவை சேர்ந்த விமானம் ஒன்று 53 பயணிகளுடன் நேற்று போர்கார்கோர்ட் நகரில் இருந்து லாகோஸ்  விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் எவ்வித கோளாறும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பிறகு திடீரென விமானத்திற்கு புகை பரவியுள்ளது. விமான என்ஜின்கள் தீப்பற்றி எரிந்ததால் புகையின் தாக்கம் அதிகரித்து சென்றுள்ளது.

மேலும், விமானத்தில் எச்சரிக்கை அலாரம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அனைவரும் அலறி துடித்துள்ளனர். ‘விமானத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது’ என சிலர் தொழுகையில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நேரங்களில் வெளியாகும் ஆக்ஸிஜன் குழாய்களும் வெளியே வராததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நிலையை உணர்ந்த விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானத்தை அவசரமாக திருப்பியுள்ளனர்.

பின்னர், சில நிமிடங்கள் கழித்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மற்றொரு விமானத்திற்கு அனுப்பட்டனர்.

விமான போக்குவரத்து பொறியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதும் விமானத்தில் என்ன கோளாறு ஏற்பட்டது என்பது குறித்து தற்போது பரிசோதனை செய்து வருகின்றனர். நடுவானில் பயணிகள் அலறி துடித்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்