வடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை

வடகொரியாவை சீண்டாதீர்கள், அதையும் மீறி சீண்டினால் அவர்களிடம் உலகை அழிக்கும் குண்டுகள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற வடகொரியா தூதர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-04-25 04:48 GMT
வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா, தென்கொரியா உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும், வடகொரியா இதை ஏற்க மறுக்கிறது.

இதனால் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை அறிந்த வடகொரியா அமெரிக்காவின் விமான தாங்கி கப்பலை தங்களால் வீழ்த்த முடியும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் ஸ்பேயின் நாட்டைச் சேர்ந்தவரும் வடகொரியாவின் கவுரவ குடிமகனாகிய அலிஜாண்ட்ரோ கவோடி பெனோஸ்  (43), ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியாவை யாரும் சீண்ட வேண்டாம் என்றும், அவ்வாறு சீண்டினால் உலகை அழிக்கும் குண்டுகள் அவர்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

பெனோஸ்  வடகொரியாவின் கவுரவ குடிமகன். இவருக்கு வடகொரியாவில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார உறவு வைத்திருக்கும் வடகொரியாவின் சிறப்பு பிரதிநிதியும் இவர் தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர் வடகொரிய அதிபரின்  அதிகாரப்பூர்வமற்ற தூதர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் ஸ்பேயினின் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி  அளித்துள்ளார். அதில், யாரும் வடகொரியாவை தொட வேண்டாம். அவர்களை தொட்டால் அவர்கள் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் மூலம் தங்களை பாதுகாத்து கொள்வார்கள்.

மேலும் சீனா, அமெரிக்காவுடன் இணைந்து போரிட நேர்ந்தால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று சீனாவுக்கு எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.

கிம் ஜாங் கடந்த 2012- ஆம் ஆண்டிலிருந்த தனது அணு ஆயுதவலிமையை பலப்படுத்தி வருவதாகவும், வடகொரிய மக்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள்.

அவர்கள் மிகவும் அமைதியான முறையில் வாழ்கிறார்கள், சமூக மோதல்கள் இல்லை, தெருவில் மக்கள் தூங்கவில்லை, இது ஒரு வாழ்க்கை முறை, அனைவரும் ஒரு பெரிய கூட்டுறவு இயக்கத்தில் வேலை செய்வதாக, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

ஏனெனில் அமெரிக்காவில் போராட்டம், வன்முறை மற்றும் சமூக மோதல்கள், பிற நாடுகளில் தெருக்களில் தூங்குதல் போன்று உள்ளனர். அதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார்.

இதனால் வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர்களிடம் தெர்மோநியூக்ளியர் குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் உலகமே அழிந்து விடும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்