இளம் வயதினருக்கான 'மிஸ் யுனிவர்ஸ்’ இந்தியாவின் சிருஷ்டி கவுர் மகுடம் சூடினார்!

அமெரிக்காவில் நடந்த இளம் வயதினருக்கான 'மிஸ் யுனிவர்ஸ் 2017’ல் இந்தியாவின் சிருஷ்டி கவுர் மகுடம் சூடினார்.

Update: 2017-04-27 10:07 GMT

வாஷிங்டன், 

புதுடெல்லியை அடுத்து நொய்டாவை சேர்ந்த சிருஷ்டி கவுர் 'மிஸ் யுனிவர்ஸ் 2017’ மகுடம் சூடினார், மற்றும் சிறந்த ஆடை அலங்காரத்திற்காக முதல் பரிசு பெற்றார்.  

மத்திய அமெரிக்காவில் உள்ள நிகாராகுவாவின் மனாகுவாவில் இந்த ஆண்டிற்கான இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் (15 முதல் 19 வயது) போட்டி நடந்தது. மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளை நடத்தி வரும் அமைப்பு இளம் வயதினருக்கான அழகிப் போட்டியை நடத்தி வருகிறது.
 
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். இளம் வயதினருக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற அழகிகள் 25 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இந்திய அழகி சிருஷ்டி கவுரும் இடம் பெற்று இருந்தார். போட்டியில் உடல் அழகு, தனித்திறன் உள்ளிட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்து இளம் வயது மிஸ் யுனிவர்ஸ்-ஆக மகுடம் சூடினார் சிருஷ்டி கவுர். மேலும் சிருஷ்டி கவுர் சிறந்த ஆடை அலங்கார போட்டியிலும் முதல் பரிசு பெற்றார். 
 
சிருஷ்டி கவுருக்கு அடுத்த இடங்களை கனடாவை சேர்ந்த சமன்தா பியரியும், மெக்சிகோவை சேர்ந்த டிராவாவும் பெற்றனர். மேலும், பிரபலமானவர்கள் பிரிவில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜிரெல்லி ஆஸ்டின் மற்றும் கவர்ச்சிப் பிரிவில் கோஸ்டாரிகாவை சேர்ந்த நிக்கோல் ஓபான்டோ ஆகியோர் பரிசுகளைத் தட்டி சென்றனர். 

சிருஷ்டி கவுர் சிறந்த தேசிய ஆடை அலங்கார போட்டியிலும் முதல் பரிசு பெற்றார். இந்திய தேசிய பறவையான மயில் போன்று நேர்த்தியான ஆடையை அணிந்து இருந்தார் சிருஷ்டி கவுர்.

சிருஷ்டி நொய்டாவில் உள்ள லோட்டஸ் வேலி இன்டர்நேஷனலில் பள்ளிப்படிப்பை முடித்தார், இப்போது லண்டன் பேஷன் பள்ளியில் படித்து வருகிறார். 

மேலும் செய்திகள்