ரஷ்யர்களுக்கு உளவுத் தகவல்களை அளித்தது சரியே என்கிறார் டிரம்ப்

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவுடன் வெள்ளை மாளிகையில் பேச்சு நடத்திய போது ஐஎஸ் இயக்கம் குறித்து அமெரிக்காவிடமிருந்த உளவுத் தகவல்களைக் கொடுத்தது சரியே என்றார் அதிபர் டிரம்ப்.

Update: 2017-05-16 22:16 GMT
வாஷிங்டன்

அதிபரின் இந்த நடவடிக்கை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் உட்பட பலரும் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில் இக்குற்றச்சாட்டை விசாரித்து வரும் உளவுத்துறைத் தலைவரான ஜேம்ஸ் கோமியை அதிபர் பதவி நீக்கம் செய்தார். இதன் பின்னணியில் ரஷ்ய அமைச்சரிடம் உளவுத் தகவல்களை அதிபர் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி அதிபரின் செயலை விமர்சித்து வருகிறார்கள். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யர்களுக்கு எந்த அளவிற்கு உளவுத் தகவல்கள் வழங்கப்பட்டதோ அதே அளவிற்கு தங்கள் அவையிலும் இத்தகவல்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோருகின்றனர். ஏனெனில் ரஷ்யா பலமுறை சிரியா, ஐரோப்பா விவகாரங்களில் அமெரிக்காவிடம் முரண்பட்டு வந்துள்ளது. ஆனால் அதிபர் டிரம்ப் ஐஎஸ் இயக்கம் இருவருக்கும் பொது எதிரி என்பதாலும், மனிதாபிமான முறையிலும் தகவல்களை அளித்ததாக தெரிவித்தார். இத்தகவல்கள் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியால் வழங்கப்பட்டுள்ளது. அத்தகவல்களை ரஷ்யாவிடம் அளித்ததன் மூலம் அக்கூட்டாளியின் அதிருப்தி ஆளாகியிருப்பதாகவும் வாதிடப்படுகிறது. 

அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் மெக்மாஸ்டர் அதிபருக்கு யாரால் இத்தகவல்கள் கொடுக்கப்பட்டது என்பது தெரியாது என்றும், அதனை அளித்தது முற்றிலும் சரியானதே என்றும் தெரிவித்துள்ளார். இச்சூழ்நிலையில் வரும் வெள்ளியன்று அதிபர் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை சவூதி அரேபியா, இஸ்ரேல், இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளவுள்ளார். 

மேலும் செய்திகள்