லண்டன் ஓட்டலில் மனித மாமிசம் பரிமாறப்பட்டதா? தவறான தகவல் வைரலாக பரவியதால் பரபரப்பு

லண்டன் நகரில் நியூகிராஸ் பகுதியில் இந்தியப் பெண்ணான ஷின்ரா பேகம் என்பவர் ‘கரி டுவிஸ்ட்’ என்ற பெயரில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.

Update: 2017-05-18 21:30 GMT
லண்டன், 

லண்டன் நகரில் நியூகிராஸ் பகுதியில் இந்தியப் பெண்ணான ஷின்ரா பேகம் என்பவர் ‘கரி டுவிஸ்ட்’ என்ற பெயரில் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலைப்பற்றி குறும்பு செய்திதளம் ஒன்றில் தவறான செய்தி வெளியானது.

அந்த செய்தியில், “தனது நியூகிராஸ் பகுதி ஓட்டலில் மனித மாமிசத்தை உணவுக்காக பயன்படுத்துவதாக, இந்திய உணவு விடுதி உரிமையாளர் ரஞ்சன் பட்டேல் கடந்த இரவில் கைது செய்யப்பட்டார். அங்கு சமைத்து பரிமாறுவதற்காக 9 மனித உடல்கள் பதப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. மேல் விசாரணைக்காக ரஞ்சன் பட்டேல் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த உணவு விடுதி மூடப்பட்டு விட்டது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டல் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பல தரப்பினரிடமும் இருந்து ஓட்டலுக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றனதாம்.

இதுபற்றி ஓட்டல் உரிமையாளரான ஷின்ரா பேகம் கூறும்போது, “இந்த தவறான தகவலை மக்கள் நம்பி விட்டார்கள். நாங்கள் 60 ஆண்டுகளாக இந்த ஓட்டலை நடத்தி வருகிறோம். யாரோ ஒருவர் தவறாக எழுதியதால் ஓட்டலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம்” என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் ஓட்டலை மூடாவிட்டால் அடித்து நொறுக்கி விடுவேன் என்று ஒருவர் மிரட்டுகிறார். ஒருவர் இதுபற்றி போலீசில் புகார் செய்திருக்கிறார். இதன்காரணமாக எங்கள் வியாபாரம் மிகவும் பாதித்து விட்டது. பலரும் எப்படி மனித மாமிசத்தை சமைத்து பரிமாறுகிறீர்கள் என்று எங்களை தொலைபேசியில் அழைத்து கேட்கிறார்கள்” என கூறினார். இதையடுத்து ஓட்டல் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்