ஊடகங்கள் பொய்யான தகவல்களை வெளியிடுகின்றன டிரம்ப் கடும் தாக்கு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பை

Update: 2017-05-29 23:30 GMT

வாஷிங்டன்,

வெற்றி பெறச்செய்ததில் ரஷியாவின் பங்களிப்பு உண்டு என அங்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு (எப்.பி.ஐ.) விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னருக்கு பங்களிப்பு இருக்கும் என்று சந்தேகிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பினர் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்பாக அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் ரஷியாவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்த தகவல் தொடர்பு சேனல் ஒன்றை நிறுவுவதற்கு முயற்சித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஜேரட் குஷ்னர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த டொனால்டு டிரம்ப் தற்போது முதன்முறையாக இந்த விவாகரத்தில் வாய்திறந்து உள்ளார். ஊடகங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களை திட்டவட்டமாக மறுத்து உள்ள அவர் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக ஊடகங்களை கடுமையாக சாடினார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘வெள்ளை மாளிகையில் இருந்து கசியும் தகவல்கள் என கூறப்படும் அனைத்தும் ஊடகங்களால் ஜோடிக்கப்பட்ட பொய்தகவல்கள் என்பதே எனது கருத்து’’ என குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு பதிவில் ‘‘ஜேரட் குஷ்னர் நாட்டிற்காக சிறப்பான பணியை செய்திருக்கிறார். அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவர் ஒரு சிறந்த மனிதர்’’ என தனது மருமகனை பாராட்டி இருக்கிறார்.

மேலும் செய்திகள்