புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர்களை இஸ்ரேல் அகற்றியது பதற்றம் தணியுமா?

ஜெருசலேம் புராதன நகரில் அமைந்துள்ள புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர்களை அகற்றி இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் தணியக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-07-25 23:30 GMT

ஜெருசலேம்,

ஜெருசலேம் புராதன நகர் பகுதியில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் புனித தலம் உள்ளது. இது யூதர்களால் ‘டெம்பிள் மவுண்ட்’ என்றும், பாலஸ்தீன முஸ்லிம்களால் ‘ஹரம் அல் ஷெரீப்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு கடந்த 14–ந் தேதி நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் இஸ்ரேல் போலீசார் 2 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் இஸ்ரேல் அதிரடியாக களம் இறங்கியது. அந்த புனித தலத்தின் நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர்களை நிறுவியது.

இது பாலஸ்தீனர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த புனித தலத்தில் தனது கட்டுப்பாட்டினை மேலும் உறுதிசெய்யும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கி இருப்பதாக பாலஸ்தீன் கருதியது.

இதன் காரணமாக பாலஸ்தீனர்கள் அந்த புனிததல வளாகத்தினுள் நுழைய மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெருக்களில் தொழுகைகள் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் வெடித்த வண்ணம் இருந்தன. இந்த மோதல்களில் பலர் பலியாகினர். அங்கு பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் அக்கறை காட்டியது. அப்படி அங்கு பதற்றம் முடிவுக்கு வராவிட்டால், அது பாலஸ்தீன், இஸ்ரேல் கடந்து பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்ற அபாயமும் ஏற்பட்டது. இது தொடர்பாக ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு பிராந்திய தூதர் எச்சரிக்கையும் விடுத்தார்.

இதனால் இஸ்ரேல் தனது புதிய பாதுகாப்பு ஏற்பாட்டை களைய வேண்டும், குறிப்பாக மெட்டல் டிடெக்டர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பேசினார்.

இந்த நிலையில் ஜெருசலேம் புனித தலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இஸ்ரேல் மந்திரிசபையின் பாதுகாப்பு குழு நேற்று கூடி விவாதித்தது. இதில் புனித தலத்தில் இருந்து மெட்டல் டிடெக்டர்களை அகற்றுவது என முடிவானது. அதை பிரதமர் அலுவலகமும் ஏற்றுக்கொண்டது.

அதைத் தொடர்ந்து புனித தலத்தில் இருந்து மெட்டல் டிடெக்டர்கள் அகற்றப்பட்டன. இது பாலஸ்தீனர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதை அவர்கள் கொண்டாடினர்.

இதனால் அங்கு பதற்றம் தணிந்து அமைதி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்