பனாமா பேப்பர்ஸ் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பதவி பறிப்பு

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பதவியை அதிரடியாக பறித்துள்ளது.

Update: 2017-07-28 07:34 GMT
இஸ்லமபாத்,

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது. இது ‘பனாமா கேட்’ ஊழல் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு, ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து, விசாரணை நடத்தியது. கூட்டுக்குழு விசாரணையின் போது, நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

இந்த குழு விசாரணை அறிக்கையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியாம் ஷெரீப், இவரது கணவர் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்ப்பு என்பதால் பாகிஸ்தான் மட்டுமல்லாது உலக நாடுகள் மத்தியிலும் இந்த தீர்ப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு  போடப்பட்டு இருந்தது.

 நவாஸ் ஷெரிப்புக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.  

மேலும், நவாஸ் ஷெரிப்புக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும்  இந்த ஊழல் வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  வெளிநாடுகளில் நவாஸ் ஷெரிப் குடும்பத்தினர் சொத்து குவித்தது ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் இந்த தீர்ப்பை வழங்கியதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பதவி பறிக்கப்பட்டதால், பாகிஸ்தானில் உச்ச கட்ட குழப்பம் ஏற்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்