பாகிஸ்தானில் அடுத்த பிரதமர் யார்? நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய ஆலோசனை

பாகிஸ்தானில் அடுத்த பிரதமர் யார்? என்பது குறித்து நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.

Update: 2017-07-29 10:00 GMT
இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் பனாமா கேட் ஊழல் வழக்கில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப் பிரதமராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டுமே பாகிஸ்தானில் பிரதமர் ஆக முடியும். இதனால் ஷேபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்க வேண்டும் எனில், தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். இதன்காரணமாக இடைக்காலமாக நவாஸ் ஷெரீப்பின் நம்பிக்கைக்குரிய ஒருவர் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 இத்தகைய விவகாரங்கள் குறித்து முடிவு எடுப்பதற்காக நவாஸ் ஷெரீப் தனது ஆதரவாளர்களுடன் இன்று  முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும்  முன்னாள் ரயில்வே மந்திரியுமான காவ்ஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சரவையில் யார் சேர்க்கப்பட வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும் நேற்று நடைபெற்ற ஆலோசனையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்