பாகிஸ்தானில் புதுக்குழப்பம் நவாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் பதவி வகிக்க வாழ்நாள் தடையா?

நவாஸ் ஷெரீப், வாழ்நாள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்க தடை விதித்துள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

Update: 2017-07-29 22:00 GMT

இஸ்லாமாபாத், 

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப், வாழ்நாள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்க தடை விதித்துள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இது தொடர்பாக பாகிஸ்தானில் புதுக்குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தாரிக் மகமது கருத்து தெரிவிக்கையில், ‘‘அரசியல் சாசனம் பிரிவு 62 (1)(எப்)–ன் கீழ் செய்யப்பட்டுள்ள தகுதி இழப்பு, தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை சுப்ரீம் கோர்ட்டின் பெரிய அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும்’’ என்றார்.

முன்னாள் தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி, ‘‘அரசியல் சாசனம் பிரிவு 62 மற்றும் 63–ன் கீழ் ஒருவர் எப்படி தேர்தலில் பங்கேற்பதில் இருந்து நிரந்தரமாக தடை விதிக்கப்பட முடியும்?’’ என கேள்வி எழுப்பினார்.

மூத்த வக்கீல் ரஹீல் கம்ரான் ஷேக், ‘‘2012–ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து யூசுப் ராஸா கிலானி அரசியல் சாசனம் பிரிவு 63–ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அந்தப் பிரிவு 5 ஆண்டுகள் நீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக பிரிவு 62 (1) (எப்), எவ்வளவு காலத்துக்கு தகுதி நீக்கம் என்பதை குறிப்பிடவில்லை. தற்போதைக்கு மட்டுமே தடையா, நிரந்தர தடையா என்பது தொடர்பாக ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பார் கவுன்சில் துணைத்தலைவர் அசன் பூன், ‘‘நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் நிரந்தரமான ஒன்று’’ என்று கூறி உள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் 2013–ம் ஆண்டின் அப்துல் கபூர் லெஹ்ரி வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி கூறியதை சுட்டுக்காட்டுகிறார். அவர், அரசியல் சாசனம் பிரிவு 63–ன் கீழான தகுதி நீக்கம் தற்காலிகமானது, பிரிவு 62–ன் கீழான தகுதி நீக்கம் நிரந்தரமானது என்று கூறினார். ஆனால் பிரிவு 62–ல், எவ்வளவு காலத்துக்கு தடை என்பதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை’’ என்று கூறி உள்ளார்.

எனவே இது தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் பெரிய அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்