இங்கிலாந்து விமான தளங்களில் வந்திறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானை தாக்க முடிவா?

இங்கிலாந்து விமான தளங்களில் 10-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் பெரிய சி-17 ரக போர் விமானங்கள் வந்திறங்கி உள்ளன.;

Update:2026-01-06 22:17 IST

லண்டன்,

ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டில் ஏற்பட்டு உள்ள போராட்டங்களை, இஸ்ரேல் ஆயுதம்போல் பயன்படுத்தி கொண்டு, ஈரான் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்த கூடும் என ஈரான் அஞ்சுகிறது. போராட்டங்கள் தொடர்ந்து ஸ்திரத்தன்மையற்ற நிலை நீடிக்கிறது என்றால், நிலைமையை பயன்படுத்தி ஈரானை இஸ்ரேல் தாக்கலாம் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

இதற்கேற்ப, அமைதியாக போராடும் போராட்டக்காரர்களை வழக்கம்போல் ஈரான் சுட்டு கொன்றால், அவர்களை மீட்பதற்காக அமெரிக்கா முன்வரும். நாங்கள் துப்பாக்கி ஏந்தி, போருக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்று டிரம்பும் கூறினார். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக ஆக்குவோம் என்றும் அவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து ஈரானின் பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரிகள் அவசர கூட்டம் நடத்தினர். இதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு ஈரானின் தெஹ்ரான் மற்றும் ஷிராஜ் நகரங்களில் ஏவுகணை பரிசோதனை மற்றும் வான் பாதுகாப்பு சாதன பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஈரானின் வடமேற்கே மரகே நகரம், தெஹ்ரான் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த வான் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு அவற்றை அரசு ஊடகங்களில் அதிகாரிகள் வெளியிட்டனர்.

இதற்கான காரணம் பற்றி அதிகாரிகளால் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றபோதும் பிராந்திய அளவில் ஏற்பட்டு உள்ள பதற்ற சூழலால், இந்த பரிசோதனைகள் போருக்கு ஈரான் தயாராகும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மத்தியிலும் இதுபோன்ற பரிசோதனைகளில் ஈரான் ஈடுபட்டு இருந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து விமான தளங்களில் 10-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் பெரிய சி-17 ரக போர் விமானங்கள் வந்திறங்கி உள்ளன. இது எதற்காக என தெரிய வரவில்லை. ஆனால், ஐரோப்பிய பகுதி வழியே வான் பரப்பில் அமெரிக்க விமானங்கள் செல்ல ஏதுவாக இந்த தளம் அமைந்துள்ளது.

கடைசியாக இந்த படைதளத்தில் இதுபோன்று அதிக அளவில் சி-17 ரக விமானங்கள் வந்து இறங்கியபோது, ஈரானுக்கு எதிரான 12 நாள் போர் நடந்தது. ஈரானின் அணு உலைகளை அமெரிக்க விமானங்கள் கடுமையாக தாக்கின என்பது கவனிக்கத்தக்கது.

இந்த விமானங்கள் ஒரு வேளை, கடந்த வாரம் மதுரோவை கைது செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட விமானங்கள் என்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ஈரான் தலைவர் அலி காமேனியை இலக்காக கொண்டே இவை வந்துள்ளன என யூகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஈரானை அமெரிக்கா தாக்க கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்