வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு
பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என வெனிசுலா அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.;
கராகஸ்
வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் கடந்த 3-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இதனிடையே, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.
இந்த நிலையில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடையாளம் தெரியாத டிரோன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த டிரோன்களை வெனிசுலா பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் வெனிசுலா தலைநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து வெனிசுலா அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தலைநகரில் நிலைமை சீராக இருப்பதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வெனிசுலா அதிபர் மாளிகை அருகே டிரோன்கள் பறந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.