இலங்கையில் தமிழ் மாணவி கற்பழித்து கொலை; 7 பேருக்கு மரண தண்டனை

இலங்கையில் தமிழ் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2017-09-27 23:46 GMT
கொழும்பு, 

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் யாழ்ப்பாணம் மாகாணத்தின் புங்குடிதீவு பகுதியை சேர்ந்தவர் சிவலோகநாதன். தமிழரான இவருடைய மகள் வித்யா (வயது 18). பள்ளியில் படித்து வந்தார்.கடந்த 2015-ம் ஆண்டு மே 13-ந் தேதி, பள்ளிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட வித்யா திரும்பி வரவில்லை.

மறுநாள், ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில், வித்யா பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. அவர் கற்பழித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர் போராட்டங்கள் நடந்தன.

காதல் நிராகரிப்பு

வித்யா கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதை வீடியோ படம் எடுப்பதற்காக, சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த சுவிஸ் குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கற்பழிப்பு வீடியோவை சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு சுவிஸ் குமார் விற்க திட்டமிட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவன், வித்யா மீது காதல்வயப்பட்டதும், அவனது காதலை வித்யா நிராகரித்ததும் தெரிய வந்தது.

மரண தண்டனை

இந்த வழக்கு, யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

மேலும், 7 பேருக்கும் 30 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர்கள் வித்யா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், ஒரு குற்றவாளியை போலீஸ் காவலில் இருந்து தப்ப அனுமதித்ததற்காக, யாழ்ப்பாணத்தின் மிக மூத்த போலீஸ் அதிகாரி லலித் ஜெயசிங்கே ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

மேலும் செய்திகள்