மதவிரோத செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் 3 பேருக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் மத விரோத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து பஞ்சாப் மாகாண கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2017-10-12 23:00 GMT
லாகூர், 

பாகிஸ்தானில் அகமதியா இனத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என கூறிக்கொண்டாலும், அந்த நாட்டு அரசும், அரசியல் சட்டமும் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. இவர்கள் முஸ்லிம்கள் இல்லை என கடந்த 1974–ம் ஆண்டிலேயே அரசியல் சாசன திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டது.

அகமதியர்கள் மதபோதனை செய்யவும், சவுதிக்கு பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

பாகிஸ்தான் அரசில் இருந்தும், பாதுகாப்பு படையில் இருந்தும் அகமதியர்களை வெளியேற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் முகமது சப்தார் நேற்று முன்தினம் வலியுறுத்தி இருந்தார். இந்த சமூகத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் சம்பவங்களும் அரங்கேற்றப்படுகின்றன.

சுவரொட்டிகள் 
கிழிப்பு

இந்த நிலையில் அகமதியர்களை சமூக புறக்கணிப்பு செய்ய வலியுறுத்தும் சுவரொட்டிகள் கடந்த 2014–ம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தின் ஷேக்குபுரா மாவட்டத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன. முஸ்லிம் வசனங்கள் அடங்கியிருந்த இந்த சுவரொட்டிகளை அகமதியா இனத்தை சேர்ந்த 3 பேர் கிழித்ததாக தெரிகிறது.

இது குறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது மத விரோத செயலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஷேக்குபுரா மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, தங்கள் இனத்தினரை சமூக புறக்கணிப்பு செய்ய வலியுறுத்தி இருந்ததால் அந்த சுவரொட்டிகளை கிழித்ததாகவும், மத விரோத செயலில் ஈடுபடவில்லை எனவும் அந்த 3 பேரும் வாக்குமூலம் அளித்தனர்.

ரூ.2 லட்சம் அபராதம்

இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் மரண தண்டனை அளித்து நீதிபதி மியான் ஜாவேத் அக்ரம் தீர்ப்பு வழங்கினார். மேலும் தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை செலுத்த தவறினால் 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக தண்டனை பெற்ற 3 பேரின் வக்கீல் தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்