தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இலங்கை தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-10-13 10:09 GMT

கொழும்பு,

இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல தமிழ் அரசியல் தலைவர்களை இலங்கை அரசு விசாரணை இன்றி கைது செய்து சிறையில் அடைத்தது. பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது. பயங்கரவாத  சட்டத்தில் உள்ள கொடூரமான ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்றும் எந்த நிபந்தனையும் இன்றி  அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள கவர்னர் செயலகம் முன்பு பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தை  இலங்கை தமிழர்கள்   கடைபிடித்தனர். வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஆர்.சம்பந்தனும் இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு,  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். 

மேலும் செய்திகள்