பயங்கரவாதி ஹபீஸ் சயீத் தடுப்பு காவலை நீட்டிக்க கோருகிறது பாகிஸ்தான் அரசு

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் தடுப்பு காவலை நீட்டிக்குமாறு லாகூர் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.

Update: 2017-10-17 11:34 GMT

லாகூர்,

ஜமாத்-உத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கங்களின் தலைவன், மும்பை தாக்குதல் சூத்திரதாரி ஹபீஸ் சயீத்தை ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து பாகிஸ்தான் கடந்த ஜனவரியில் ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் வீட்டுக்காவலில் அடைந்தது. அப்போது  பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். 

வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹபீஸ் சயீத் தரப்பில் லாகூர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டது. அரசு உரிய ஆதாரங்களை சமர்பிக்கவில்லை என்றால் விடுவிக்க வேண்டும் எனவும் எச்சரித்தது. பாகிஸ்தான் அரசு தரப்பில், ஹபீஸ் சயீத்திற்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பதாகவும், ஹபீஸ் சயீத்திற்கு எந்தவித சலுகையும் காட்டக்கூடாது, இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம் என்று தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுவிக்க வழிவகை செய்யும் வகையில் அவன் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் அதிகாரிகள் திரும்ப பெற்றது. ஹபீஸ் சயீத் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டை விடுவித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்நிலையில் மீண்டும் லாகூர் கோர்ட்டில் இதுதொடர்பான விசாரணை நடைபெற்ற போது, பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து ஹபீஸ் சயீத்தை விடுவித்த பாகிஸ்தான் அரசு, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவனுடைய தடுப்பு காவலை நீட்டிக்க கேட்டுக் கொண்டு உள்ளது. இன்று ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் நால்வர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் அரசு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹபீஸ் சயீத்தை மூன்று மாத காலம்தான் தடுப்பு காவலில் வைக்க முடியும், மீண்டும் நீட்டிக்க வேண்டும் என்றால் நீதித்துறை ஆய்வு குழுவிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில் அவனுடைய தடுப்பு காவலை நீட்டிக்க கோரிக்கை விடுத்து உள்ளது பாகிஸ்தான் அரசு. விசாரணையை கேட்ட லாகூர் ஐகோர்ட்டு, ஹபீஸ் சயீத்தின் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தொடர்பாக 19-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு பஞ்சாப் மாநில அரசு வழக்கறிஞர், வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு நோட்டீஸ் விடுக்க உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்