பிலிப்பைன்சில் ராணுவ வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டூழியம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் மராவி நகரில் பயங்கரவாதிகள் சுட்டதில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

Update: 2017-11-10 21:30 GMT
மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் மராவி நகரில் அபு சயாப் என்னும் குழுவைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்களை அங்கிருந்து விரட்டி அடிக்க அதிபர் ரோட்ரிகோ துதர்தே உத்தரவிட்டதன் பேரில் ராணுவப்படை அந்த நகரில் முகாமிட்டு பயங்கரவாதிகளுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டு வந்தது.

இதில், தென் கிழக்கு ஆசியாவின் ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்த இஸ்நிலோன் ஹபிலோன் உள்பட ஏராளமான பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே 5 மாதங்களாக நடந்து வந்த சண்டை கடந்த மாதம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் அபு சயாப் குழுவின் துணை தளபதி புரிஜி இன்டாமா, பஷிலான் தீவில் உள்ள சுமிசிப் நகரில் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, ராணுவம் அந்த நகருக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது, அங்கு பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் ராணுவத்தினரை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். ராணுவத்தினரும் பதில் தாக்குதலை நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இருப்பினும் பயங்கரவாதிகள் ராணுவத்தினரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டனர்.

பயங்கரவாதிகள் சுட்டதில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்