இலங்கை அரசுக்கு ஐ.நா. சபை கண்டிப்பு

விசாரணையின்றி தமிழர்களை காவலில் வைப்பதை நிறுத்துங்கள் என்று இலங்கை அரசை ஐ.நா. சபை கண்டித்து உள்ளது.

Update: 2017-12-16 00:00 GMT

கொழும்பு,

இலங்கையில், கடந்த 1979–ம் ஆண்டு, பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அச்சட்டம், பயங்கரவாதத்துக்கு உதவுவதை தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, எந்த விசாரணையும் இன்றி, 18 மாதங்கள் வரை காவலில் வைத்திருக்க போலீசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இதை பயன்படுத்தி, தமிழர்கள் பலர் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால், போர் முடிந்த பிறகும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சட்டவிரோத காவல் தொடர்பான ஐ.நா. பணிக்குழு உறுப்பினர் லெய் டூமே, 11 நாட்களாக இலங்கையில் தங்கி இருந்து ஆய்வு செய்தார். நேற்று அவர் கொழும்புவில் பேட்டி அளித்தபோது, விசாரணையின்றி சட்டவிரோதமாக தமிழர்களை காவலில் வைப்பதை கைவிடுமாறு இலங்கை அரசை வற்புறுத்தினார்.

மேலும், பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு பதிலாக, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் சட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார். இலங்கையில் தனிநபர் சுதந்திரத்துக்கு சவால்கள் நிலவுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்