ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி

ஹபீஸ் சயீத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியது அமெரிக்காவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-01-19 21:45 GMT
வாஷிங்டன், 

பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி, ஜியோ டி.வி.க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மீது நாட்டில் எந்த ஒரு வழக்கும் கிடையாது; எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; வழக்கு இருந்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார்.

அது மட்டுமின்றி அந்தப் பேட்டியின்போது அவர் ஹபீஸ் சயீத்தை மிகவும் மரியாதைக்கு உரிய ‘சாகிப்’ அல்லது ‘சார்’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.

சர்வதேச பயங்கரவாதி என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள ஒருவரை, பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி மரியாதைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியதும் அமெரிக்காவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் வாஷிங்டனில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ஹபீஸ் சயீத் பற்றிய பாகிஸ்தான் பிரதமரின் பேட்டி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “ஆமாம். ஹபீஸ் சயீத் பற்றி பாகிஸ்தான் பிரதமர் அப்பாசி கூறி உள்ள கருத்துக்களை அறிந்தோம்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “லஷ்கர் இ தொய்பா வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் என தடை செய்யப்பட்டு உள்ளது. அந்த இயக்கத்துடன் தொடர்பு உடைய ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதி என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்து உள்ளது. இதில் எங்களது அழுத்தத்தையும், கவலையையும் பாகிஸ்தானிடம் தெளிவுபடுத்தி உள்ளோம். அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “எங்களைப் பொறுத்தவரையில் ஹபீஸ் சயீத் பயங்கரவாதிதான். 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல்களில் அமெரிக்கர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்படுவதற்கு அவர்தான் மூளையாக செயல்பட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறினார். 

மேலும் செய்திகள்