அவசர நிலையை மேலும் நீட்டிக்க விருப்பம் இல்லை: மாலத்தீவு தூதர்

மாலத்தீவுகளின் அண்டை நாடான இலங்கையின் தூதர் முகமது ஹுசைன் ஷரிப், கடும் அரசியல் நெருக்கடி நிலவி வந்த நிலையில் நாளையுடன் மாலத்தீவுகளில் அவசரக்கால சட்டம் முடிவடைவதாக அறிவித்தார். #MaldivesEmergency

Update: 2018-03-20 06:46 GMT
கொழும்பு,

மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது.  

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டும், விடுவிக்காத அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.  மேலும் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு நாடெங்கும் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது. அதிபரின் உத்தரவின் படி அவசரச்சட்டத்தின் கீழ்,  ஊழல் குற்றங்சாட்டப்பட்ட இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் மீதமுள்ள மூன்று நீதிபதிகள் யாமீனின் எதிர்ப்பாளர்களை விடுவிப்பதற்கான உத்தரவை ரத்து செய்தனர்.  

மாலத்தீவில் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட 15 நாள் அவசர நிலை காலாவதி ஆனதும், மேலும் 30 நாட்களுக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக அதிபர் யாமீன் கயூம் அறிவித்தார். அவசர நிலை நீட்டிக்கப்பட்டதற்கு  இந்தியா உட்பட உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்து இருந்தன. இந்த நிலையில்,  30 நாட்கள் அவசர நிலை முடிவுக்கு வர உள்ள நிலையில், மாலத்தீவில் இனி அவசர நிலை நீட்டிக்கப்படாது என்று மாலத்தீவு தூதர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாலத்தீவுகளின் அண்டை நாடான இலங்கையின் தூதர் முகமது ஹுசைன் ஷரிப் கூறுகையில்,  ”கடந்த முப்பது நாள்களாக நிலவி வந்த அவசரகாலச் சட்டத்தினால் நாடெங்கும் வன்முறை பரவி அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நாளையுடன் அவசரகாலச்சட்டம் முடிவடையும் நிலையில் இனியும் நீடிக்க விருப்பமில்லை” எனக் கூறினார்.

மேலும் செய்திகள்