பாகிஸ்தானில் சிறுமி கொலை வழக்கு குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்தது லாகூர் உயர்நீதிமன்றம்

பாகிஸ்தானில் சிறுமி கொலை வழக்கு குற்றவாளிக்கு மரண தண்டனையை லாகூர் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. #DeathSentence

Update: 2018-03-21 08:01 GMT
லாகூர்,

பாகிஸ்தானில்  பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் ஜனவரி மாதம், ஜைனப் (வயது 7) என்ற சிறுமி திடீரென மாயமானாள். சிறுமி மாயமானது பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தபோது, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். உடற்கூறு ஆய்வில்,  அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 

அந்தப்பகுதியில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை உலுக்கிய  இந்த சம்பவம் தொடர்பாக  இம்ரான் அலி (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆட்கடத்தல்,  பாலியல் பலாத்காரம், கொலை, பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்ற  நிலையில், லாகூர் விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி                          மாதம் 17 ஆம் தேதி  தீர்ப்பளித்தது. இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 4 மரண தண்டனை  விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும், குற்றவாளிக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாகிஸ்தானில் குற்றம் நடைபெற்று சுமார் ஒரு மாத இடைவெளிக்குள் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. 

இதற்கிடையில், தனக்கு மரண தண்டனை விதித்ததை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளியான இம்ரான் அலி மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மேல்முறையீட்டு மனுவை  விசாரணைக்கு பின் தள்ளுபடி செய்த லாகூர் உயர் நீதிமன்றம், மரண தண்டனையை  உறுதி செய்து நேற்று தீர்ப்பு அளித்துள்ளது. 

மேலும் செய்திகள்