அதிபர் தேர்தலில் லிபியா நிதியுதவி: வழக்கு விசாரணைக்காக 2வது நாளாக சர்கோசி ஆஜர்

பிரான்சில் அதிபர் தேர்தலில் லிபியா நிதியுதவி செய்தது என்ற குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்கில் 2வது நாளாக போலீசார் விசாரணைக்கு சர்கோசி இன்று ஆஜரானார். #NicolasSarkozy

Update: 2018-03-21 10:52 GMT

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த நிகோலஸ் சர்கோசி, கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்திற்காக, அப்பொழுது லிபிய அதிபராக இருந்த முகமது கடாபியிடம் இருந்து பெருமளவில் பணம் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றிய வழக்கு 2013ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.  இந்த வழக்கில், சர்கோசியின் முன்னாள் உதவியாளர் அலெக்சாண்டிரி டிஜோஹ்ரி லண்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சர்கோசியின் ஆட்சியில் மந்திரியாக இருந்த பிரைஸ் ஹார்டிபியூயெக்ஸ் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  அவரிடம் நேற்றிரவு 11.30 மணிவரை விசாரணை நடந்தது.  இதனை தொடர்ந்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோசியை கைது செய்த போலீசார் நேற்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட சர்கோரி அதன்பின் நள்ளிரவில் அங்கிருந்து சென்றார்.  இதுபற்றி அவரது வழக்கறிஞர்கள் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி 48 மணிநேரம் வரை விசாரணைக்காக சர்கோசியை போலீசார் காவலில் எடுக்கலாம்.  அதன்பின்னர் அவரை விடுவிக்கலாம் அல்லது நீதிபதி ஒருவர் முன் ஆஜர்படுத்தலாம்.  விசாரணைக்கு நாளை ஆஜராவேன் என கூறி சர்கோசி அங்கிருந்து சென்றார்.

இந்த நிலையில், சர்கோசி மேற்கு பாரீசின் நான்டெர்ரி புறநகரில், ஊழல், பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றை விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரிகள் முன் இன்று 2வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.

மேலும் செய்திகள்