பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள் நவாஸ் செரீப் மீண்டும் உறுதி

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள் என நவாஸ் செரீப் மீண்டும் உறுதி செய்து உள்ளார். #MumbaiAttack #NawazSharif

Update: 2018-05-14 09:41 GMT
இஸ்லாமாபாத்,

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக நுழைந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவன் ஹபீஸ் சயீத். லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன். அந்த இயக்கம் தடை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜமாத்-உத்-தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறான். பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் தாக்குதலை முன்னெடுத்தார்கள் என இந்தியா ஆதாரங்களை சமர்பித்தும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் எல்லையை தாண்டிசென்று மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வெளிப்படையாகவே தெரிவித்தார். இது பாகிஸ்தான் அரசுக்கு பிரச்சனையை மேலும் அதிகரித்து உள்ளது. பயங்கரவாதம் விவகாரத்தில் உலகளாவிய அளவில் எதிர்ப்பை எதிர்க்கொண்டு வரும் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது. சர்வதேச அரங்கில் அவருடைய பேச்சுக்கள் எதிரொலிக்கும். இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இல்லை என்ற நாடகத்தையும் தொடர்கிறது. 

பாகிஸ்தான் மீடியாக்களும் உலக அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என நவாஸ் செரீப் மீது பாய்ந்து உள்ளது. 

நவாஸ் செரீப்பின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் அவருடைய கருத்தை நிராகரித்தது.
 
இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்தான் மும்பையில் தாக்குதல் நடத்தினார்கள் என நவாஸ் செரீப் மீண்டும் உறுதி செய்து உள்ளார். 

2008 பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் தன்னுடைய சமீபத்திய கருத்தை நியாயப்படுத்தி உள்ள நவாஸ் செரீப், இவ்விவகாரத்தில் உண்மையைதான் பேசபோகிறேன், அதனால் ஏற்படும் விளைவை எதிர்க்கொள்ள தயாராகவே உள்ளேன் என குறிப்பிட்டு உள்ளார். 

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் செரீப், “என்னுடைய பேச்சில் எதனை தவறாக கூறினேன்?” என கேள்வியை எழுப்பி உள்ளார். மும்பை தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி முஷாரப், முன்னாள் உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமத் துர்ரானி ஆகியோர் இதனை உறுதிசெய்து உள்ளார்கள் எனவும் குறிப்பிட்டு உள்ளார். இவ்விவகாரத்தில் அவரை தேசதுரோகி என விமர்சனம் செய்யும் உள்ளூர் மீடியாக்களை விமர்சனம் செய்து உள்ளார். 

மேலும் செய்திகள்