அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்

அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.

Update: 2018-05-18 23:30 GMT

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டெக்சாஸ் நகரில் சான்டா பே உயர்நிலைப்பள்ளி உள்ளது.

அங்கு நேற்று பள்ளி அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்தான். தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இந்த சம்பவத்தில், 10 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். மேலும் பலர் காயம் அடைந்தனர். ஒரு போலீஸ் அதிகாரியும் சுடப்பட்டதாக தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவன், பள்ளி மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவனை போலீசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

அமெரிக்காவில் சமீபகாலமாக பள்ளிக்கூடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் நடந்த 3–வது சம்பவம் இதுவாகும்.

கடந்த பிப்ரவரி மாதம், புளோரிடாவில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியானார்கள்.

மேலும் செய்திகள்