கியூபா நாட்டில் விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி?

கியூபா நாட்டில் நடந்த விமான விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2018-05-19 22:15 GMT

ஹவானா,

கியூபா நாட்டின் தலைநகர் ஹவானா. அங்கு உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, போயிங் 737–201 ரக பயணிகள் விமானம் அந்த நாட்டின் ஹோல்கியுன் நகருக்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.

அதில் 104 பயணிகளும், 6 ஊழியர்களும் பயணம் செய்தனர்.

ஆனால் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் 100–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 4 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார் எனவும், 3 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் 3 பேரும் பெண்கள் என்றும் ஹவானாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விபத்துக்குள்ளான விமானம், மிகப்பழைய விமானம் ஆகும். இது, 1979–ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த விமானம் கடந்த நவம்பர் மாதம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததால் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த விமானத்தை கியூபா அரசின் கியூபனா டி ஏவியேசியன் நிறுவனத்துக்கு, மெக்சிகோ நாட்டின் ஏரோலயனியாஸ் டாமோஜ் நிறுவனம் குத்தகைக்கு விட்டு இருந்தது.

விபத்துக்குள்ளானபோது விமானத்தில் இருந்த ஊழியர்கள் 6 பேரும் மெக்சிகோ நாட்டினர் என தகவல்கள் கூறுகின்றன.

பயணிகளைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையினர் கியூபா நாட்டினர் என்றும், 5 பேர் மட்டுமே வெளிநாட்டினர் என்றும் தெரியவந்து உள்ளது. விபத்தில் தங்கள் நாட்டினரும் பலியாகி உள்ளதாக மெக்சிகோ, அர்ஜெண்டினா நாட்டினர் அறிவித்து உள்ளனர்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் கியூபா அதிபர் மிக்கேல் டயஸ் கேனல் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து, பார்வையிட்டு மிகுந்த வருத்தம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. நிறைய பேர் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார்.

இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை.

ஆனால் விமானம் வானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதை நேரில் கண்ட சிலர் கூறும்போது, ‘‘விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பே தீப்பிடித்து விட்டது’’ என்றனர்.

ஜோஸ் லூயிஸ் என்ற ஒருவர் கூறும்போது, ‘‘அந்த விமானம் புறப்பட்டு சென்றதை நான் பார்த்தேன். ஆனால் கண நேரத்தில் அந்த விமானம், கீழே திரும்பியது. அதைக்கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்’’ என்றார்.

கில்பர்ட்டோ மெனன்டஸ் என்னும் இன்னொருவர் கூறுகையில், ‘‘நாங்கள் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டோம். அதைத் தொடர்ந்து அந்த பகுதியை கரும்புகை சூழ்ந்து விட்டது’’ என்று சொன்னார்.

மெக்சிகோ போக்குவரத்து துறையினர் இந்த விபத்து பற்றி இணையதளத்தில் குறிப்பிடுகையில், ‘‘விமானம் புறப்பட்டு சென்றபோதே அதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுத்தான் அது பூமியை நோக்கி திரும்பி இருக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

போயிங் விமான நிறுவனம், தனது தொழில் நுட்ப வல்லுனர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்க தயார் என அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்