மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாயார்!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இளம்வயது மகளை ஏமாற்றி முதியவருக்கு திருமணம் செய்து வைத்துள்ள வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Update: 2018-05-24 11:03 GMT
லண்டன்

இங்கிலாந்தில் வசித்து வரும்  பாகிஸ்தானிய  42 வயது பெண் ஒருவர்  தனது 13 வயது மகளை ஏமாற்றி  பாகிஸ்தான் அழைத்துச் சென்று அங்கு தனது உறவினரான அவரைவிட 16 வயது அதிகமான நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

திருமணத்தை அடுத்து முதலிரவும் முடிந்த நிலையில் குறித்த சிறுமி இங்கிலாந்து  திரும்பிய சில மாதங்களில் கருக்கலைப்புக்கும் உட்படுத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமது மகளுக்கு 18 வயது முடிந்த நிலையில் அந்த பெண்  மீண்டும் தனது மகளுடன் கோடை விடுமுறை என்ற பெயரில் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

அங்கே சென்ற பின்னரே இஸ்லாமிய முறைப்படி அந்த நபருடன் தமது மகளின் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதை அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகளை கடுமையாக தாக்கியதுடன், பாஸ்போர்ட்டை எரித்து விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.

இதனிடையே தாயாரின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து தமது மகளை பாகிஸ்தானிலேயே விட்டுவிட்டு அந்த பெண் இங்கிலாந்து  திரும்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் தொடுத்த வழக்கின் விசாரணைக்கு முடிவில் குறித்த தாயார் குற்றவாளி என பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில்  கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே கட்டாய திருமணத்திற்கு தடை அமலில் உள்ளது. அது மட்டுமின்றி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்